நாகை அரசு மருத்துவமனையிலிருந்து பெண் சிசு கடத்தல்
நாகை அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவரது மனைவி கீர்த்திகா(23).கீர்த்திகாவுக்கு கடந்த 19-ம் தேதி திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது மகப்பேறு
நாகை அரசு மருத்துவமனையிலிருந்த ஒரு பெண் சிசுவை, ஒரு பெண் புதன்கிழமை காலை கடத்திச் சென்றார்.
நாகை அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவரது மனைவி கீர்த்திகா(23).கீர்த்திகாவுக்கு கடந்த 19-ம் தேதி திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது மகப்பேறு நடைபெற்று, ஒரு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து, கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக கீர்த்திகா கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கீர்த்திகாவின் பெண் சிசுவுக்கு சொட்டு மருந்து புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, கீர்த்திகாவின் படுக்கைக்கு அருகிலுள்ள மற்றொரு படுக்கையில் இருந்த ஒரு பெண், கீர்த்திகாவின் குழந்தைக்கு சொட்டு மருந்து புகட்டி வருவதாகக் கூறி, குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வராததையடுத்து, கீர்த்திகா தனது குடும்பத்தினர் மற்றும் செவிலியர்களிடம் முறையிட்டார். இதனால், நாகை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி மற்றும் காவல் துறையினர், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, மருத்துவமனையிலிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளைப் பார்வையிட்டனர்.
இதில், கீர்த்திகாவின் பெண் சிசுவை ஒரு பெண் மாடிப்படி வழியே வெளியே கொண்டுச் செல்வது தெரியவந்தது. தன்னிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்ற பெண் அவர் தான் என்பதை கீர்த்திகா உறுதி செய்தார்.இருப்பினும், அந்தப் பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை படுக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதற்கான எந்தப் பதிவும் மருத்துவமனையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
பெண் சிசு கடத்தப்பட்ட சம்பவம் நாகை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.