முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி மலைக்கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்  கூட்டம்

ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையைத் தொடர்ந்து புதன்கிழமை அமாவாசை தினமும் வந்ததால் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் அருள்மிகு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

பழனியில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு மலைக்கோயிலில் இலட்சக்கணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறையைத் தொடர்ந்து புதன்கிழமை அமாவாசை தினமும் வந்ததால் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.  படிவழியில் ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில்  மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் வின்ச், ரோப்கார் நிலையங்களில் சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் டிக்கெட் பெற்று சென்றனர். தவிர, மலைக் கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். 

மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள்  நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.  தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் பால்காவடி, மயில்பீலிகாவடி எடுத்து பாதயாத்திரையாக வந்திருந்தனர். மதுரை ஸ்ரீராஜஸ்ரீஅஷ்ட கன்னிகா வடிவேலன் அன்னதான திருப்பணிக்குழு சார்பில் பழனி முருகனை இராஜ அலங்காரத்துடன் அலங்கரித்து மதுரை அழகர் கோயிலில் இருந்து பஞ்சாமிர்த காவடியுடன் பாதயாத்திரையாக  வந்து தரிசனம் செய்தனர். 

மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியிலும் புத்தாண்டை முன்னிட்டு மரகதலிங்கத்துக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு  சிறப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.  இரவு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று  சின்னக்குமாரரை தரிசித்து பரவசமடைந்தனர்.  திருக்கோயில் சார்பில் விற்கப்படும் இராஜஅலங்கார காலண்டர் விற்பனையை பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு துவக்கி வைத்தார். 

பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் வசதிகளை திருக்கோயில் சார்பில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.