ஆள் இல்லாத வீடுகளை கண்காணித்து இரவில் திருடிய 2 பேர் கைது:130 சவரன் பறிமுதல்
விருதுநகர் பகுதியில் வாகனத்தில் பகலில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவில் பல்வேறு வீடுகளில் பூட்டுக்களை உடைத்து நகை, பணம் திருடியதாக இந்திய ஜனநாயக கட்சியின்
விருதுநகர் பகுதியில் வாகனத்தில் பகலில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவில் பல்வேறு வீடுகளில் பூட்டுக்களை உடைத்து நகை, பணம் திருடியதாக இந்திய ஜனநாயக கட்சியின் முன்னாள் பொறுப்பாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 சவரன் நகை, திருட்டுக்கு பயன்படுத்தியதாக கார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனை சாலைப்பகுதியில் உள்ள ஐ.சி.ஐ காலனியைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனர். அதேபோல், ஆமத்தூர் கோழிப்பண்ணை உரிமையாளர் சேகர், இப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிற சுப்பிரமணியம், மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் திருட்டுச் சம்பவமும், விருதுநகர்-சிவகாசி சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் வாகனத்தில் வந்து தங்கச் சங்கிலியை பறிக்கும் செயல்களும் அடுத்தடுத்து நடந்து வந்தது.
இது குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறவர்களை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில், காவல் ஆய்வாளர் மூக்கன், சார்பு ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்ட போலீஸார்கள் மூலம் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். அதில், கிருஷ்ணன்கோவில் அருகில் குன்னூர் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு நாளும் அவரின் நடமாட்டத்தை கண்காணித்து சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த நகைக்கடை பணியாளர் சரவணன் என்பவரும் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்ததும் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Advertisement
மேலும், அவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் 130 சரவன் நகை பறிமுதல் செய்தனர். இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பு பகலில் குறிப்பிட்ட பகுதிகளில் கார் மற்றும் பைக்கில் சென்று பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணிப்பார்களாம். அதையடுத்து இரவில் பூட்டை உடைத்தோ, ஜன்னல் கம்பிகளை உடைத்தோ வீட்டிற்குள் புகுந்து நகை, ரொக்கம், மடிக்கணினிகள், உயர்வகை செல்போன் உள்ளிட்டவைகளையும் திருடியுள்ளனர்.
இதில் இந்திய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக உமாசங்கரும், ஒன்றிய செயலாளராக சரவணனும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருடிய நகைகளை விற்று குன்னூர் கிராமத்தில் 60 லட்சத்தில் புது வீடு அமைத்தும் வருகிறாராம். இது தொடர்பாக பக்கத்து மாவட்டங்களில் ஏதாவது கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவல் துணைக்கண்காணிப்பாளர் சுலைமான் விசாரித்து வருகிறார்.