முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு ரூ.30 கோடி: மத்திய தரைவழித்துறை அமைச்சகம் ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சாலைகளில் வாகன  போக்குவரத்து விரைவாகச் செல்லும் வகையில் அகலப்படுத்தும் பணிக்காக மத்திய தரைவழித்துறை அமைச்சகம்

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:37 AM

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சாலைகளில் வாகன  போக்குவரத்து விரைவாகச் செல்லும் வகையில் அகலப்படுத்தும் பணிக்காக மத்திய தரைவழித்துறை அமைச்சகம் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற இருக்கிறது.

     விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலன சாலைகள் குண்டும், குழியுமாகவும் மற்றும் சாலையோரங்கள் களிமண் தரையாகவும் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் விரைவில் சேதம் அடைவதோடு, போக்குவரத்திற்கு லாயக்கற்றவையாகவும் மாறி வருகிறது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளும் போக்குவரத்திற்கு இடையூராகவும் இருந்து வருகிறது. வாகன போக்குவரத்து விரைவாக இருக்கும் வகையிலும் அகலப்படுத்த வேண்டும்.

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவும் வேண்டும் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர் இது தொடர்பாக மத்திய தரைவழித்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னான்டஸ் இடம் கோரிக்கை மனுவையும் அளித்திருந்தார்.

Advertisement

    அதன் அடிப்படையில் இப்பகுதியில் குறிப்பிட்ட சாலைகளான ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் மல்லி வரையில் 10 கீ.மீட்டர் தூரத்திற்கு ரூ.9.50 கோடியும், திருத்தங்கல் முதல் விருதுநகர் வரையிலான 20 கீ.மீட்டர் தூரத்திற்கு ரூ.20.50 கோடியும் என மொத்தம் ரூ.30 கோடி மத்திய தரைவழித்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகள் நடைபெற  இருக்கிறது.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சிவாஜி கூறுகையில், தற்போது இக்குறிப்பிட்ட சாலை 7 மீட்டர் அகலத்தில் இருக்கிறது. இந்நிலையில்  சாலையோரப் பகுதியில் களிமண் தரையாக இருப்பதால் மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்க முடியாது. இதைக் கவனத்தில் கொண்டு இருபுறமும் 3 மீட்டர் சமமாக அகலப்படுத்தப்பட இருக்கிறது.

அதோடு, குண்டும், குழியுமான பகுதிகளும் பராமரிக்கப்பட இருக்கிறது. இக்குறிப்பிட்ட பகுதியில் அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் போக்குவரத்து வாகனங்கள் அதிகம் வந்து செல்கிறது. அதனால் இப்பகுதி சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்பணிகள் 10 நாள்களில் தொடங்கி நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக மண்டல பொறியாளர் சிவாஜி தெரிவித்தார்.

    ஏற்கனவே இதேபோன்று முதல் கட்டமாக வத்திராயிருப்பு முதல் அழாகபுரி வரையில் ரூ.10.29 கோடியிலும், அழகாபுரி முதல் விருதுநகர் வரையில் ரூ.12.24 கோடியிலும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.