நடராஜர் கோயிலை அரசே ஏற்று நடத்த தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு காலதாமதம் ஆகுமானால் உடனடியாக
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு காலதாமதம் ஆகுமானால் உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடராஜர் கோயில் நிர்வாகத்தை தமிழகஅரசு ஏற்று நடத்தியது செல்லாது என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்துள்ள தீர்ப்பு தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாகும். கடந்த 2009-ம் ஆண்டு தமிழகஅரசு இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதற்கான நிர்வாக அலுவரையும் நியமித்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழகஅரசின் நிர்வாகம் தொடர ஆணையிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும், சுப்பிரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழகஅரசு இதனை உரிய முறையில் கையாள அக்கறை காட்டவில்லை. மூத்த வழக்குரைஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை.
ஏனோ, தானோ என நடத்திட வேண்டும் என இவ்வழக்கை நடத்தியதோ என்ற ஐயப்பாடு உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகஅரசின் ஆணையை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால், அதுகுறித்து தமிழகஅரசு விசாரிக்கலாமே தவிர, நிர்வாக அலுவலரை நியமிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனி வகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ. இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டடங்களில் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர, இவற்றில் தீட்சிதர்களின் பங்கும் எதுவும் இல்லை என்ற உண்மையையோ உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இந்த உண்மையை முன் வைத்து தமிழகஅரசு வலுவாக வாதாடாமல் போனது இத்தீர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இத்தீர்ப்பை சட்டமுறையில் எதிர் கொள்ளும் வகையில் தமிழகஅரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தனிச்சட்டம் இயற்றி சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதே ஒரே வழி என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.