முகப்பு
தற்போதைய செய்திகள்

சுய தொழில் தொடங்க மகளிருக்கு தன்னம்பிக்கையளித்தவர் முதல்வர்:அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

மகளிர் குழு கூட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் சொந்த தொழில் செய்யும் அளவிற்கு முதல்வர் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:32 AM

மகளிர் குழு கூட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் சொந்த தொழில் செய்யும் அளவிற்கு முதல்வர் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

   விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விரைவு பட்டா மற்றும் மகளிர்க்குழு கூட்டமைப்புகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா ஆகியவை  சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

   இவ்விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசுகையில், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் நலதிட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவது அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகிறார்கள். தற்போது, அம்மா திட்டம் மூலம் கிராமங்களைச் தேடி சென்று பயனாளிகளுக்கு உதவிகள் அளித்து வருகிறார்கள். மகளிர் குழுக்களை தமிழகத்தில் தொடங்கியதோடு, சொந்தக்காலில் நிற்கும் வகையில் கடன் உதவிகளை வழங்கி சொந்த தொழில் தொடங்கும் அளவிற்கு தன்னம்பிக்கையை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார். இவ்விழாவில் 46 மகளிர் குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.2.43 கோடி ஊக்க நிதியும் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

     இதில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், இதற்கு முன்பு வரையில் நிலத்திற்கான பட்டா வாங்குவதற்கு அதிகாரிகளை தேடி பொதுமக்கள் அலைந்து வந்தனர். இதை மாற்றும் வகையில் கிராமங்களில் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை பெற்று உடனே பட்டா மாறுதல், பெயர் திருத்தம் ஆகியவைகள் செய்து கொடுக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400 பேருக்கு நிலத்திற்கான பட்டா, பெயர் மாற்றம் செய்து ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதில், அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இணைந்து விரைவு பட்டா மற்றும் மகளிர் கூட்டமைப்புகளுக்கான ஊக்க நிதிக்கான காசோலைகளையும் வழங்கினார்கள். இந்த விழாவில் மாவட்ட முதன்மைக் கண்காணப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மகளிர் திட்ட அலுவலர் பிச்சை, நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கி.கலாநிதி, நகர செயலாளர் முகமது நயினார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.