மீனவர் பேச்சுவார்த்தை: எச்சரிக்கையுடன் செயல்பட கருணாநிதி வேண்டுகோள்
மீனவர் பிரச்னை தொடர்பான பேச்சின்போது இலங்கையிடம் மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர்
மீனவர் பிரச்னை தொடர்பான பேச்சின்போது இலங்கையிடம் மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, மீன் பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகிய பிரச்னைகள் குறித்து இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.நீண்ட இழுபறிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தில்லியில் நடைபெறும் என்றும், சென்னையில் நடைபெறும் என்றும் இருவிதமான செய்திகள் வருகின்றன.
அனைத்துத் தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே, கடந்த 14-ஆம் தேதி தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.அதன் பிறகு இலங்கை அமைச்சர் அளித்த பேட்டியில், இரு நாட்டு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியச் சிறைகளில் உள்ள 160 இலங்கை மீனவர்களையும், 4 படகுகளையும் இந்திய அரசு படிப்படியாக விடுதலை செய்யும். அதுபோல இலங்கைச் சிறையில் உள்ள 236 மீனவர்கள், 90 படகுகளையும் இலங்கை அரசு படிப்படியாக விடுவிக்கும். இந்தப் பணி உடனடியாக தொடங்கும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாகக் கூறுவதில் உண்மையல்ல என்று கூறியிருக்கிறார்.
Advertisement
ஆனால், இதே இலங்கை அமைச்சர் இரு நாள்களுக்கு முன்பு இலங்கையில் பேசும்போது, பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டு மீனவர்களும் ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதால் எங்களது பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.ஆனால், அவர் தில்லியில் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும்போது, நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருகின்றன. இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்த 6 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய குழுவுக்கு மத்திய வேளாண் துறைச் செயலாளரும், இலங்கை குழுவுக்கு அந்நாட்டின் மீன்வளத் துறை செயலாளரும் தலைமை வகிக்க உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் பங்கு என்ன என்பதை அதிமுக அரசு மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில் இலங்கை அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பதால், மீனவர் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைகளின் பேது மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.