திருச்சி திமுக மாநாட்டு பந்தலுக்கு முன்பு தீக்குளிக்க போவதாக விருதுநகர் மாவட்டம், எஸ்.கொடிக்குளம் முன்னள் பேரூராட்சி தலைவரும், நகர செயலாளருமான ஜே.எம்.கோஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியைச் சேர்ந்தவர் ஜே.எம்.கோஸ். இவர் திமுகவில் எஸ்.கொடிக்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவராகவும், நகரச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட சீட்டு கேட்டு விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திமுகவில் லட்சக்கணக்கில் பணம் இருந்தால்தான் தேர்தலில் நிற்க முடியும். அதற்காக ரூ.32 லட்சத்தை அரு்பபுக்கோட்டை பாலையம்பட்டியில் அவரது நூற்பாலையில் வைத்து கொடுத்தாராம். ஆனால், பணத்தை பெற்று கொண்ட நிலையிலும் சீட்டு வாங்கிக் கொடுக்கவில்லையாம்.
பின்னர் கொடுத்த பணத்தை அவரிடம் கேட்டபோது தராமல் ஏமாற்றினாராம். இது தொடர்பாக அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் பண மோசடி செய்ததாக ஜே.எம்.கோஸ், மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மீது புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் கொடுத்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் எனக் கூறி கிருஷ்ணன்கோவிலில் பஸ்ஸில் இறங்கிய போது மாவட்ட செயலாளர் ஆள்கள் சிலர் கடத்தி பெங்களூரு அழைத்து சென்று தாக்கினார்கள். எனது சகோதரரின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் காயத்துடன் விடுவிக்கப்பட்டேன்.
இச்சம்பவம் குறித்து அண்ணா அறிவாலயத்திற்கு 17-க்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பினேன். உண்ணாவிரதம் இருக்கவும் முயற்சி செய்தேன். கடந்த 3.4.2012ல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைத்து குறிப்பிட்ட நாள்களில் பணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக சமதானம் செய்து வைத்தார். இதுவரையில் பணம் கொடுக்கவில்லை. முன்புபோல் வெளியில் நடமாடமுடியாத நிலையில் கொலை மிரட்டல் வருகிறது.
எனவே மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ரூ.32 லட்சத்தை வசூல் செய்து தராத திமுகவை கண்டித்தும் திருச்சியில் பிப்-15ல் மாநாடு பந்தலுக்கு முன்பு தீக்குளிக்கும் போராட்டம் நடத்த போகிறேன். ஏற்கனவே, அண்ணா அறிவாலயம், மாவட்ட காவல் துறை உள்ளிட்டோருக்கும் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜே.எம்.கோஸ் மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.