நெல்லை மாவட்டத்தில் 1.07 லட்சம் புதிய வாக்காளர்கள்: 1302 மையங்களில் வாக்காளர் அட்டை விநியோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும்
திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி 1302 மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது. புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையினை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 10 பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் 11 லட்சத்து 52 ஆயிரத்து 944 பேரும், பெண்கள் 11 லட்சத்து 60 ஆயிரத்து 613 பேரும், மற்றவர்கள் 12 பேரும் ஆக மொத்தம் 23 லட்சத்து 13 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.
01.01.2014 அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் இம்மாவட்டத்தில் புதிய வாக்காளராக விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியான 1,07,032 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியினை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தொடங்கியது.
இம்மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2707 வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1302 மையங்களில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. புதிய வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையினை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.
புதிய வாக்காளர்கள் வரும் பிப். 5 ம் தேதி வரை தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்