ஆக்கிரமிக்கப்பட்ட சொத்தை மீட்க மனுக்கள் மூட்டையுடன் வந்த முதியவர்: நெல்லையில் சோகம்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்தை மீட்டு தருமாறு கேட்டு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் 201 முறை புகார் தெரிவித்த மனுக்களை சாக்குப் பையில் மூட்டையாக
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்தை மீட்டு தருமாறு கேட்டு தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் 201 முறை புகார் தெரிவித்த மனுக்களை சாக்குப் பையில் மூட்டையாக கொண்டு வந்து 202 வது முறையாக திங்கள்கிழமை ஆட்சியரிடம் முதியவர் கோரிக்கை மனு அளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி கீழப்பாறையடி மணகாவலன் தெருவை சேர்ந்த ராமையா மகன் பரமசிவன் (70). கூலித் தொழிலாளி. இவருக்கு அவரது தந்தை எழுதி கொடுத்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாராம். இதே பகுதியை சேர்ந்த சிலர் பரமசிவனுக்கு சொந்தமான வீட்டை ஆக்கிரமித்து கொண்டு, அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.
அதிமுக தொண்டரான இவர் ஆக்கிரமிக்கப்பட்ட தன்னுடைய சொத்தை மீட்டு தருமாறு கேட்டு மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தார். சென்னையில் முதல்வர் இருக்கும் போயஸ்கார்டனுக்கு நேரில் சென்றும், கடிதம் மூலமாகவும் 51 முறை கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
மாவட்ட ஆட்சியருக்கு 75 முறையும், காவல்துறை எஸ்.பி. க்கு 75 முறையும் பரமசிவன் கோரிக்கை மனு அளித்தாராம். ஒவ்வொரு முறையும் புகார் தெரிவித்த கோரிக்கை மனுக்களின் நகல்கள், சொத்துக்குரிய ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு சாக்கு பையில் மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்த பரமசிவன் 202 ஆவது முறையாக ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், என்னுடைய வீடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வருக்கு 51 முறையும், ஆட்சியரிடம் 75 முறையும், எஸ்.பி. யிடம் 75 முறையும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது சொத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். கூலி வேலை செய்து பெண் பிள்ளைகளுடன் வசிக்கும் நான் என்னுடைய சொத்தை மீட்க முடியாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறேன் என்றார் அவர்.