அண்ணாமலைப் பல்கலை. மீது அரசு தனிக்கவனம் செலுத்துகிறது: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
அண்ணாமலைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்கும், மாணவர்களின் நலனுக்கும் தமிழகஅரசு தனிக்கவனம் செலுத்துகிறது என பல்கலைக்கழக நிர்வாகியும், அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்கும், மாணவர்களின் நலனுக்கும் தமிழகஅரசு தனிக்கவனம் செலுத்துகிறது என பல்கலைக்கழக நிர்வாகியும், அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையும், காவ்யா பதிப்பகமும் இணைந்து நாட்டுப்புறவியல்-பன்முகப் பார்வை என்ற பன்னாட்டு கருத்தரங்கினை அண்மையில் நடத்தியது. கருத்தரங்கிணை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ஆய்வுக்கோவை நூல்களான 'கரையெல்லாம் செண்பகப்பூ' 'காடெல்லாம் பிச்சிப்பூ' என்ற நூல்களை வெளியிட, முதல் பிரதிகளை வேளாண்புல முதல்வர் ஜெ.வசந்தகுமார், மொழிப்புல முதல்வர் மா.கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பேசியது: இக்கருத்தரங்கின் மூலம் நாட்டுப்புற மற்றும் பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவற்றை வெளிக்கொணர வழிவகை செய்ய வேண்டும். மேலும் சமூகத்தில் மக்களிடையே பொதிந்துள்ள தொன்மக் கூறுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது இக்கருத்தரங்கு. தமிழக அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வி கற்பதுடன், இதுபோன்ற கருத்தரங்குகளிலும், ஆய்வுகளிலும் பங்கேற்று தங்களது சிந்தனைகளை செலுத்த வேண்டும் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
கருத்தரங்கு அமைப்புச் செயலர் முனைவர் மி.சி.தியாகராஜன் வரவேற்றார். இந்திய மொழிப்புல முதல்வர் பேராசிரியர் மா.கணேசன் தலைமை வகித்தார். வேளாண்புல முதல்வரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான ஜெ.வசந்தகுமார் நாட்டுப்புறவியல் ஆய்வின் பல்வேறு கூறுகளையும், முக்கியத்துவத்தையும் பற்றி சிறப்புரையாற்றினார். தமிழியல்துறை தலைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார். நாட்டுப்புறவியல் அறிஞர் க.சண்முகசுந்தரம் மையப்பொருள் குறித்துப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.கணேசன் நன்றி கூறினார்.