புதிய மின் இணைப்புக்கு ரூ. 13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வர் கைது
நாகை மாவட்டம், சிக்கலில் புதிய வீட்டு மின் இணைப்புக்கு ரூ. 13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்
நாகை மாவட்டம், சிக்கலில் புதிய வீட்டு மின் இணைப்புக்கு ரூ. 13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
நாகையை அடுத்த சிக்கல் வடக்குத் தெருவைச் சேர்ந்த முகமது இனியா மகன் சாகுல்ஹமீது(39). இவர், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் தனது வீட்டுக்கு மின் இணைப்புக் கோரி சிக்கல் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.இதனிடையே, சிக்கல் மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ்(49) மற்றும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அலுவலரும், புதிய மின் இணைப்பு தருவதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சாகுல்ஹமீதுவிடம் வற்புறுத்தியுள்ளனர்.
இது குறித்து சாகுல்ஹமீது நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவஞானவேல் மற்றும் போலீஸார் அளித்த அறிவுரையின் பேரில், சாகுல்ஹமீது ரசாயனப் பொடி தூவிய ரூ. 13 ஆயிரம் பணத்துடன் சனிக்கிழமை சிக்கல் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று, மின்வாரிய வணிக ஆய்வர் கோவிந்தராஜிடம் லஞ்சப் பணத்தை அளித்தார். கோவிந்தராஜ் அந்த லஞ்சப் பணத்தை வாங்கிய போது, அப்பகுதியில் ஏற்கெனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், சந்திரன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார், கோவிந்தராஜை லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர்.