முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந் திருவிழாவையொட்டி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருவிழா நாள்களில் பூங்கோயில், வெள்ளி கற்பக விருட்சம், தங்க பூத வாகனம், வெள்ளிக்குதிரை, வெள்ளி ரிஷபம், இந்திர விமானம், வெள்ளி சப்பரத்தில்  சுவாமி வீதியுலா வந்தார். காந்திமதியம்மன் வெள்ளிக்கமலம், வெள்ளி சிம்மம், ரிஷபம், வெள்ளி காமதேனு, இந்திர விமானங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக் கோயிலில் ஆனித்திருவிழாவில் மட்டும் நடைபெறும் பஞ்சமூர்த்தி தீபாராதனை திருவிழா நாள்களில் தினமும் மாலை சிறப்பு யாகபூஜைக்கு பின்பு நடைபெற்றது. சுவாமி, அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  ஏழாம் திருநாளான கடந்த 8 ஆம் தேதி சுவாமி தந்தப் பல்லக்கிலும், அம்மன் முத்துப் பல்லக்கிலும் தவழ்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளினர். இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். எட்டாம் திருநாளான புதன்கிழமை சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை, பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதியுலா வந்தார். அதன்பின்பு தேர்கடாட்சம் வீதியுலாவும், அம்மன் தங்க வாகனத்தில் நகர்வீதி உலாவும் நடைபெற்றது.திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினர். விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் தேர்களில் வலம் வந்தனர்.

450 டன் எடைகொண்ட பெரிய தேரில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளினார். காலை 8.10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி மேயர் (பொ) பூ.ஜெகநாதன் என்ற கணேசன், மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி, மாநகர காவல் துணை ஆணையர் து.பெ.சுரேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ம.அன்புமணி, உதவி ஆணையர் மா.கண்ணதாசன், ஆய்வாளர் ச.ஆனந்த், கோயில் செயல்அலுவலர் ந.யக்ஞநாராயணன் உள்பட  பல்லாயிரக்கணக்கானோர் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →