முகப்பு
தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் அருகே சிலிண்டர் வெடித்து 18 குடிசை வீடுகள் தீக்கிரை: வருவாய்த் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில், புதன்கிழமை பிற்பகல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 குடிசை வீடுகள் எரிந்து தீக்கிரையானது. மேலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தது. காலதாமதமாக வந்த வருவாய்த் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில், புதன்கிழமை பிற்பகல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 18 குடிசை வீடுகள் எரிந்து தீக்கிரையானது. மேலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தது. காலதாமதமாக வந்த வருவாய்த் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிழக்கு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தம்பியான் மகன் குழந்தை (48). இவர், அந்த கிராமத்தில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் அவரது குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டரை, ஸ்டவில் இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது, எரிவாயு கசிந்ததில் சிலிண்டர் வெடித்து குழந்தையின் குடிசை வீட்டில் தீ பரவியது.

அதைத்தொடர்ந்து, அருகிலிருந்த சவரிமுத்து மகன்கள் சின்னப்பன், செபஸ்டியன், அந்தோணிமுத்து, சூசைராஜ் மற்றும் அமிர்தம், அருளப்பன், முத்து, சந்தியாவு, சுரேஷ், பாஸ்கர், செந்தில், ராஜூ, மகிமைதாஸ், பகுத்தறிவாளன், பாத்திமா மேரி, பிரபாகரன் ஆகியோரது 18 குடிசை வீடுகளும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், வீட்டு உபயோகப் பொருள்களான டி.வி, மிக்ஸி, பேன், நெல் மூட்டைகள், ரொக்கப் பணம், தங்கம் உள்பட சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வருவாய்த் துறையினரை கண்டித்து சாலை மறியல்:

குரும்பலூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு வருவாய்த் துறையினர் செல்லவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவாய்த் துறையினரின் மெத்தன போக்கை கண்டித்தும், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும், உரிய நிவாரணப் பொருள்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூர்- துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி மற்றும் போலீஸார் அங்கு சென்று, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிதயை தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →