தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்தியில் மோடி ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது என்று கூறியுள்ள மத்திய கனரக, தொழில்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதற்காக தமிழகத்திலும் பாஜக

க. தங்கராஜா

மத்தியில் மோடி ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதத்தை அழித்து விட முடியாது என்று கூறியுள்ள மத்திய கனரக, தொழில்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதற்காக தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் வி.ரமேஷ், கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கான முதலாமாண்டு நினைவஞ்சலிக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷூக்கு மலரஞ்சலி செலுத்தி, பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தர்மத்தின் காவலராக விளங்கிய ஆடிட்டர் ரமேஷ், தனது வாழ்நாளில் எந்த அச்சுறுத்தலையும் கண்டு பயப்படாதவர். அவர் பயந்து வாழ்ந்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்களால் ஏராளமான சகோதரர்களை இழந்துள்ளோம். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.இருப்பினும் அவர்களின் தாக்குதலைக் கண்டு நாம் பயந்து கொள்ளவோ, ஒழிந்து கொள்ளவோ கூடாது. மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதிகள் முடங்கிவிடுவார்கள் என்று நாம் எண்ண முடியாது. அவர்கள் இருக்கும் வரையிலும் பயங்கரவாதம் இருந்து கொண்டே இருக்கும்.அவர்களை அழிக்கும் வரையிலும் தேச பக்தர்கள் ஒதுங்கிப்போகவோ, ஓயவோ மாட்டார்கள். தர்மத்தைக் காக்கும் கடமைப் போரில் நாம் உடனடியாக களம் இறங்க வேண்டும்.கடந்த 1984-ல் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அவர் அதை தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் உக்ரைன் நாட்டில் மலேசிய விமானம் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகி உள்ளனர். அந்த விமானத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் செல்ல இருந்தது. இதனால் அந்தத் தாக்குதல் யாரைக் குறிவைத்து நடத்தப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாத்துக் கொண்டிருப்பதைப் போன்று, நாட்டுக்குள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாதுகாத்து வருகின்றனர்.தேச பக்தர்களைத் தாக்கியவர்கள் கணக்கிட முடியாத அளவுக்கு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதைப் போலவே தேசத்தைக் காப்பவர்களாகிய நாங்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் அவர்களை திருப்பித் தாக்கவோ, அழிவுப் பணிகளில் ஈடுபடவோமாட்டோம். மாறாக ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே ஈடுபடுவோம்.

கடந்த ஆண்டு ரமேஷ் இறந்த நாளில், இதுபோன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்கு நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சூளுரைத்தோம். அதேபோல் நாம் மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம். ஆனால் அதைப் பார்க்க ரமேஷ் உயிருடன் இல்லை.மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததால் மட்டுமே பயங்கரவாதத்தை நாம் தடுத்து விடுவோம் என்று எண்ண முடியாது. பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க மாநிலத்திலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும். வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவை இந்துக்கள் நாடாக உடனடியாக அறிவிக்க வேண்டும். நரேந்திர மோடி பிரதமரானதும் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் உடனடியாக அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அதற்கு 50 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகும். ஆனால் நரேந்திர மோடி தனது திறமையால் அதை விரைவில் செய்து முடிப்பார் என்றார்.

பாஜகவின் தேசிய அமைப்பு இணை பொதுச் செயலர் சதீஷ், மாநில துணைத் தலைவர் எச்.ராஜா, பொதுச் செயலர் வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ். மாநில செய்திப் பிரிவு பொறுப்பாளர் சடகோபன் உள்ளிட்டோர் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT