முகப்பு
தற்போதைய செய்திகள்

விஸ்வ ஹிந்து பரிஷத் பொன்விழாவை ஓராண்டு கொண்டாட முடிவு:  ராகவலு

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொன்விழாவை ஓராண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அந்த அமைப்பின் அகில உலக இணைப் பொதுச் செயலர் ராகவலு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொன்விழாவை ஓராண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அந்த அமைப்பின் அகில உலக இணைப் பொதுச் செயலர் ராகவலு.திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ராகவலு கூறியதாவது:

1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தனது பொன்விழாவைத் தொட்டுள்ளது.இதனை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (கிருஷ்ண ஜயந்தி நாள்) முதல் ஓராண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒற்றுமை யாத்திரை நடத்தப்படுகிறது. 50 நாடுகளிலும் இதுபோன்ற யாத்திரை நடத்தப்படும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாவட்ட அளவில் ஹிந்து எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.

நவம்பர் 2 ஆம் தேதி ஒரே நாளில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ரத்த தான முகாம்களை நடத்தி, 1 லட்சம் யூனிட் ரத்தம் வழங்கப்பட உள்ளது. நவம்பர் 21, 22, 23 ஆம் தேதிகளில் அகில உலக ஹிந்து மாநாடு தில்லியில் நடத்தப்பட உள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். இதுதவிர தாய்மார்கள், இளம்பெண்களுக்கான தனித்தனிக் கூட்டங்களும் நடத்தப்படும்.

2015 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை இந்துக்களின் பண்டிகைக் காலமாகும். இந்த நாள்களில் சிறப்பாக வழிபாடுகளை நடத்துவதோடு, இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் ராமநவமி விழா சிறப்பாக நடத்தப்படும். 2015 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை இந்தியாவில் 1 லட்சம் மக்கள் வசிக்கும் அனைத்து நகரங்களிலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அனைத்துப் பகுதிகளிலும் சத்சங்கங்கள் நடைபெறும். அந்த மாதத்தின் 6 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கும்பமேளா நடைபெறும்போது சொர்ண ஜயந்தி நிகழ்ச்சி நடத்தப்படும். இதுதவிர தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், போபால் ஆகிய பகுதிகளில் தேசிய அளவிலான ஹிந்து மாநாடுகள் நடைபெற உள்ளன. இவற்றில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக, தேசிய, மாநிலத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார் அவர்.

பேட்டியின்போது தேசிய இணைச் செயலர் கோபால்ரத்தினம், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் குலைக்காதர், கோட்டச் செயலர் செல்லப்பாண்டியன், அமர்நாத் சிவலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →