நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்
அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் காந்திமதியம்மன் சன்னிதியில் ஆடிப்பூரத் திருநாள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் காந்திமதியம்மன் சன்னிதியில் ஆடிப்பூரத் திருநாள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு காந்திமதியம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா நாள்களில் காந்திமதி அம்மனுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
4 ஆம் திருநாளான வியாழக்கிழமை (ஜூலை 24) நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் வளையல்கள் வாங்கிவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டு, பின்னர் வளையல்களை பிரசாதமாக வாங்கிச் செல்வார்கள். அன்று இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவார்.
10 ஆம் திருநாளான இம் மாதம் 30 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள், கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாள் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.யக்ஞநாராயணன் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.