விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி தொடக்கம்
விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் க
விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில், பட்டாசு ஆலை தொழிலதிபர் செல்வராஜ், தொழிலதிபர் இதயம் முத்து, சர்வதேச அளவிலான சதுரங்க அமைப்பின் செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக இப்போட்டியில் பங்கேற்பதற்காக மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், பங்காளதேஷ், நேபால், கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1 கிராண்ட் மாஸ்டர், 13 சர்வதேச மாஸ்டர்கள், 1 பிடே மாஸ்டர், 1 கேண்டிடேட் மாஸ்டர், தேசிய, மாநில அளவில் சாதனை செய்தவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்பதற்காக பிற்பகல் முதலே போட்டி நடத்தப்படும் அரங்கத்திற்கு வருகை தந்தனர். இப்போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 30ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
இதில், வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பரிசு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.65 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், 4-வது பரிசு முதல் 35-வது பரிசு வரையில் ரொக்க பணமாகவும் அளிக்கப்படுகிறது.
இதில், பொதுப்பிரிவில் 8,10,12,15 வயது பிரிவில் முதன் மூன்று இடங்களை பெறுகிறவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்படும். இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இதே வயது பிரிவில் பங்கேற்பவர்களுக்கு பரிசு அளிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.