எய்ம்ஸ் மருத்துவமனையை வேப்பூர் பகுதியில் அமைக்க முதல்வருக்கு முன்னாள் எம்பி டாக்டர் வி.குழந்தைவேலு கோரிக்கை
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை வேப்பூர் பகுதியில் அமைக்க தமிழக முதல்வர் இடத்தை தேர்வு செய்து மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமீபத்தில் திமுகவிலிருந்து, அதிமுகவில் ஜெயலலிதா
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை வேப்பூர் பகுதியில் அமைக்க தமிழக முதல்வர் இடத்தை தேர்வு செய்து மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சமீபத்தில் திமுகவிலிருந்து, அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்த முன்னாள் எம்பி டாக்டர் வி.குழந்தைவேலு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கடித விபரம்:
அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோளுக்கு இணங்க புதுதில்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக்கல்வி நிலையத்திற்கு (AIMS) இணையான மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்வி நிலையத்தை தமிழகத்தில் நிறுவ 100 லிருந்து 150 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு தமிழகஅரசினை மத்தியஅரசு கோரியுள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். 1980-ம் ஆண்டு நான் மக்களவை உறுப்பினராக இருந்த போது மத்தியஅரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மூலம் தில்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக்கல்வி நிலையத்திற்கு இணையாக புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்வி நிலையத்தை விரிவாக்க நடவடிக்கைகள மேற்கொண்டேன். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக்கல்வி நிலையத்திற்கு இணையான மருத்துவக்கல்வி நிலையத்தினை உருவாக்கிட வேண்டுமென கோரிக்கை வைத்து வலியுறுத்தினேன். தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கோரிக்கைக்கு தங்களால் தீர்வு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தினை உருவாக்க தேவைப்படும் 150 லிருந்து 200 ஏக்கர் நிலபரப்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடமான வேப்பூரை ஒட்டி பரவி கிடக்கிறது. அண்மையில் வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள வேப்பூர் பகுதிக்கும், கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சின்னசேலம் குறுக்குச்சாலைக்கும் இடைபட்ட கடலூர்- சேலம் நெடுஞ்சாலை இருமருங்கிலும் 200 ஏக்கர் நிலப்பரப்பு இடம் வனத்துறைக்கு சொந்தமானதாக உள்ளது. மேற்கண்ட இடம் தமிழ்நாட்டின் மையப்பகுதியாக அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான இடமாகும்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் மேம்பட்ட மருத்துவமனைக்ள் நிறைவாக இருப்பதால், தமிழ்நாட்டின் மையப்பகுதியாக உள்ள வேப்பூரை ஒட்டிய பகுதியில் இம்மருத்துவமனையை அமைத்தால், ஏழை-எளிய மக்கள் பயன்பாட்டிற்கு உதவுவதோடு, கிராமப்புறங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பெரிதும் உதவிடும் என கடிதத்தில் வே.குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.