திருமண வயதை எட்டாத சிறுமியை 54 வயது நிறைந்தவருக்கு திருமணம் செய்துகொடுத்த பெற்றோர் மற்றும் தரகரை நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.தலைமறைவான 54 வயது மாப்பிள்ளையை போலீஸார் தேடிவருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அருகே பூதம்பாடியைச் சேர்ந்த சின்னதுரை-மல்லிகா தம்பதியினருக்கு 4 மகள்கள். ஏழ்மையான நிலையில் குடும்பத்தை நடத்திவரும் சின்னதுரை தனது 2 மகள்களை திருமணம் செய்துகொடுத்துவிட்டார். 3வது மகள் முத்துலட்சுமி 10ஆம் முடித்த நிலையில் அவரை திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார்.அப்போது சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த திருமண தரகர்கள் ஆறுமுகம் மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம் தனது 3வது மகளை திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்கேற்றவகையில் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து ஆறுமுகமும், வேல்முருகனும் தீவிரமாக மாப்பிள்ளைத் தேடும் பணியில் ஈடுபட்டு சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த குப்புசாமி(54) என்பவரை சுட்டிக்காட்டி, திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதற்கு ஈடான வகையில் பெண் வீட்டாருக்கு குறிப்பிட்டத் தொகை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சின்னதுரையிடம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து பணத்துக்கு ஆசைப்பட்ட சின்னதுரை திருமண வயதைக் கூட எட்டாத 16 வயது மகளை திருமணம் செய்துகொடுக்க சம்மதித்துள்ளார். இதையடுத்து 2014 ஜனவரி 2ஆம் தேதி குப்புசாமிக்கு, முத்துலட்சுமியை நிர்ப்பந்தப்படுத்தி, ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
குப்புசாமிக்கு ஏற்கனவே திருமணமாகியிருப்பதும், திருமண வயதில் இரு மகன்களும் இருப்பது முத்துலட்சுமிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து முத்துலட்சுமி அங்கிருந்து வெளியேற பலமுறை முயற்சித்த போதும் அது முடியாமல் போயுள்ளது. இத்தகவல் மாவட்ட சமூக நல அலுவலரான புவனேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சேத்தியாத்தோப்பிற்கு சென்ற அவர் அங்கு விசாரணை மேற்கொண்டு, முத்துலட்சுமியை மீட்டு, முத்துலட்சுமியின் பெற்றோர் மற்றும் தரகர்களாக செயல்பட்ட ஆறுமுகம், வேல்முருகன், மாப்பிள்ளை குப்புசாமி ஆகியோர் மீது நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரைப் பெற்றுக்கொண்ட நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரேவதி, விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவுசெய்து, முத்துலட்சுமியின் பெற்றோர் சின்னதுரை, மல்லிகா மற்றும் தரகர் ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரை செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.
தலைமறைவான குப்புசாமியும், மற்றொரு தரகரான வேல்முருகனும் தலைமறைவாகிவிட்டனர். இதனிடையே முத்துலட்சுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.