தம்பி வாங்கிய கடனை, அண்ணனிடம் கேட்டதால் ஏற்பட்ட மோதலில், ஆயுதப்படை காவலரான அண்ணன் தாக்கப்பட்டார்.
திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் கு.மணி(36). சீலப்பாடி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது தம்பி செல்வக்குமார். சகோதரர்கள் இருவரும், சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில், சீலப்பாடி மூவேந்தர் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில், செல்வக்குமாருக்கு ரூ.10ஆயிரம் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. சில மாதங்கள் வரை வாங்கிய கடனுக்கு, தவணை செலுத்தி வந்த செல்வக்குமார், கடந்த 4 மாதமாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கடன் கொடுத்த நிதி நிறுவனத்திலிருந்து, கோபாலகிருஷ்ணனை தேடி வந்துள்ளனர். தற்போது செல்வக்குமார் வெளியூரில் வசிப்பதால், அவரது சகோதரர் மணியின் செல்போன் நம்பரை கோபாலகிருஷ்ணன், கடன் வசூலிக்க வந்தவர்களிடம் கொடுத்துள்ளார்.அதன்பேரில் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், புதன்கிழமை காலை மணியை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, தம்பிக்கு பணம் வாங்கி கொடுத்த விவரமே தெரியாத தன்னுடைய செல்போன் நம்பரை எப்படிக் கொடுக்கலாம் என கோபாலகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், அரிவாளால் மணியை தாக்கியுள்ளார். காயமடைந்த காவலர் மணி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவலர் மணி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.