ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியாரை மீட்கக்கோரி சிவகங்கை ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கிறிஸ்துவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி உறவினர்கள் மறைமாநில யேசு சபையினர்
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கிறிஸ்துவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி உறவினர்கள் மறைமாநில யேசு சபையினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அந்தோணி. இவரது மனைவி மரியதங்கம். இவர்களுக்கு அலெக்சிஸ் பிரேம்குமார் (47), ஆல்பர்ட் மனோகரன் (திருவாடானை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்), ஜோசப் (தனியார் நிறுவனம் ஊழியர்), எலிசபெத் (வேலூரில் கன்னியாஸ்திரி), சகாயசெல்வி (சிவகங்கை பள்ளியில் ஆசிரியர்)என 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
கடத்தப்பட்ட அலெக்ஸிஸ் பிரேம்குமார் வாரியன்வயல் கிராமத்தில் 3.5.1967ஆம் ஆண்டு பிறந்தவர். 8ஆம் வகுப்புவரை புலியால் பள்ளியிலும், 12ஆம் வகுப்பு வரை தேவகோட்டை தே பிரிட்டோ பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர் மறை கல்வி கற்பதற்காக திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள பெஸ்கி மறையியல் கல்லூரியில் 15 ஆண்டுகள் படித்தார். இதனைத் தொடர்ந்து அகதிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று அகதி குழந்தைகளுக்கான கல்வி் பணியை மேற்கொண்டு வந்தார்.
Advertisement
கடந்த 2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்கான பணியை மேற்கொள்ள சேசு சபையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகங்கை மதுரை சாலையில் வசிக்கும் சகோதரி சகாயசெல்வியின் வீட்டு விசேஷத்திற்காக சிவகங்கைக்கு வந்த அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரத்திற்குத் திரும்பி உள்ளார். கடைசியாக சகோதரன் மனோகரனுடன் கடந்த ஜூன் 1ஆம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 2ஆம் தேதி (திங்கள்கிழமை) அவர் கடத்தப்பட்ட விவரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை அந்தோணி, சகோதரர்கள், சகோதரி மற்றம் தேவகோட்டை, மறைமாநில யேசு சபைத் தலைவர் ஆகியோர் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.