கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தாங்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.சாலைகளிலும், வீடுகளிலும் வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் தொப்பி அணிந்தும், கண் கண்ணாடிகள் அணிந்த படியும் சென்று வந்ததை காண முடிந்தது. கடலூரில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் இருந்ததால் பொதுமக்கள் தாங்க முடியாத அளவுக்கு அவதிப்பட்டனர்.
அதேபோல் நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டு சென்றதை காண முடிந்தது. இதையடுத்து இரவு 9 மணி அளவில் கடலூர் பகுதியில் திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய ஆரம்பித்தது.இந்த திடீர் மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றது.
இதேபோல் நெய்வேலி, மந்தாரக்குப்பம், திட்டக்குடி, பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையினால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. ஊ.மங்கலம் அம்பேத்கர் தெருவில் உள்ள ஒருவரது வீட்டு தென்னை மரத்தில் திடீரென மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்தது.
உடன் இது பற்றி நெய்வேலி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.