தாமிரவருணி நதியை பாதுகாக்க வலியுறுத்தி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தாமிரவருணி நதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நதியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தாமிரவருணி நதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நதியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தி ஆகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கி.மீ தொலைவு பாய்ந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் தாமிரவருணி நதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
ஆங்காங்கே நதியில் கொட்டப்படும் கழிவுகளால் ஆற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு மாறி வருகிறது. அரசு தாமிரவருணி நதியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவ்டட அறிவிக்க வேண்டும்.
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 கால்வாய்களை முழுமையாக பராமரிக்க வேண்டும். சிதிலமடைந்து காணப்படும் பாசன மடைகளை சீரமைக்க வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள பாசனக் குளங்கள் 100 ஆண்டுகளுக்கு முன் தூர் வாரப்பட்டது. குட்டையாக மாறி வரும் பாசனக் குளங்களை சீரமைக்க வேண்டும்.
பாசனக் குளங்கள், நீர் நிலைகள், தாமிரவருணி நதியை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் முழுமையாக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நீர் நிலைகளை பாதுகாக்கய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.வி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ஏஐடியூசி செயலர் எஸ். காசிவிஸ்வநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஆர். கசமுத்து, மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார், மாவட்டத் துணைத் தலைவர் பி. பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலர் எஸ். வேலாயுதம், மாவட்ட பொருளாளர் ஆர். ஈஸ்வரன், நிர்வாகக்குழு உறுப்பினர் கே. முருகன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.