வி.கே. புரத்தில் மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம் பசுக்கடைவிளை பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி (32). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள் (30). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். காளியம்மாள் பீடி சுற்றி வருகிறார். துரைபாண்டி வேலைக்கு சென்றாலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்து ஊதாரித் தனமாக செலவு செய்து வந்தாராம்.
இதனிடையே மகளிர் குழு மூலமாக கிடைத்த கடன் தொகை ரூ. 20 ஆயிரத்தை வைத்து காளியம்மாள், தனக்கு சகோதரர் வாங்கி கொடுத்த மனையில் குடிசை அமைக்க முடிவு செய்தாராம். மேற்கண்ட நிலத்தை துரைபாண்டி மனைவிக்கு தெரியாமல் விற்பனை செய்து குடித்து செலவு செய்தது காளியம்மாளுக்கு தெரியவந்தது.
இது குறித்து திங்கள்கிழமை இரவு கணவனிடம் காளியம்மாள் கேட்டாராம். அப்போது ஆத்திரம் அடைந்த துரைபாண்டி காளியம்மாளை அடித்தாராம். இதில் பலத்த காயமடைந்த காளியம்மாளை பக்கத்து வீட்டில் வசிப்போர் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி காளியம்மாள் அங்கு இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து துரைபாண்டியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.