முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்னக நதிகளை இணைப்பதால் மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னை தீரும் - பாஜக தலைவர் இல.கணேசன்

தென்ன நதிகளை இணைப்பது மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னை தீர வாய்ப்பாக அமையுமென்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

தென்ன நதிகளை இணைப்பது மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னை தீர வாய்ப்பாக அமையுமென்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது :  பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியது மத்திய ஆட்சிக்கும், மாநில ஆட்சிக்கும் நல்லுறவை ஏற்படுத்த உதவும். அதிமுகவுடன் பாஜக உறவு நெருக்கம் ஏற்படுவது காலம்தான் கூறமுடியும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பு வழங்குகிறதோ அதன்படி மத்திய அரசு செயல்படுமென அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக காவிரி பிரச்னையால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமையுமென நம்பிக்கை கொள்வோம்.

மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்னை நீடித்துவருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை மத்திய அரசு தற்போது நிறைவேற்றினால், நதிநீர் பிரச்னை கண்டிப்பாக தீரும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளின் முதல்வர்கள் பலர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்துவருகின்றனர். இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதாக பிரதமர் கூறிவரும்போது, பாஜகவுடன் கூட்டணியில் உள்ள புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் கோரிக்கையை பிரமதர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலை இப்போது உருவாகியிருக்கிறது. மத்தியில் பல முறை காங்கிரஸூக்கு மக்கள் பெரும்பான்மை அளித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களின் பிரச்னைகளை தீர்க்கவோ, நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ஆணவத்துடன் செயல்பட்டதன் விளைவு, மக்கள் எதிர்க்கட்சிக்கு உரிய அந்தஸ்தைகூட அளிக்காமல் இந்த தேர்தலில் தண்டித்துவிட்டனர்.

மத்திய அமைச்சரை நியமிக்கும் முழு அதிகாரம் பிரதமருக்கே உள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்த அதிகாரம் அவரிடம் இல்லை. பிரதமர் நரேந்திரமோடி அவருக்குள்ள அதிகாரத்தின்படி செயல்படுகிறார். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தோருக்கு அமைச்சர் பதவி அளிப்பது தொடர்பாக பிரதமரே முடிவு செய்வார் என்றார் இல.கணேசன்.

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிக்கை, ஸ்ரீ சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார். கோயிலில் அன்னதானம் வழங்கினார் இல.கணேசன். கோயிலுக்கு வந்த அவரை பாஜக புதுவை மாநில செயலரும் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான எம்.அருள்முருகன், பாஜக தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட  நிர்வாகிகள் வரவேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →