நெல்லை அருகே கங்கைகொண்டானில் இளைஞர் வெட்டிக்கொலை: அண்ணன் சரண்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் திங்கள்கிழமை இரவு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் மன்றத்தில்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் திங்கள்கிழமை இரவு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பூல்பாண்டியன் மகன் ஆறுமுகம் (32). கங்கைகொண்டானில் வாகன காப்பகம் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாரம். இதனால், தனது தாயாருடன் ஆறுமுகம் வசித்து வந்தார்.இவரது சகோதரர் உச்சிமாகாளி (37). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் கங்கைகொண்டானில் வசிக்கின்றனர். ஆறுமுகத்திற்கும், உச்சிமாகாளியின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதனால், சகோதரர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மற்றும் சகோதரரை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வந்த உச்சிமாகாளி கண்டித்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் வெகுநேரமாகியும் ஆறுமுகம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லையாம். அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் பார்த்தபோது அரிவாளால் வெட்டப்பட்டு ஆறுமுகம் சடலமாக கிடப்பது தெரியவந்ததாம். தகவலறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் ஆய்வாளர் பிரதாபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3 இல் உச்சிமாகாளி சரணடைந்தார். மனுவை விசாரித்த நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.