முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் தாமிரவருணி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பேரணி தொடங்கியது. தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அ.ஜோசப் கென்னடி வரவேற்றார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கொ.அ.அப்துல்ஹமீது

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

தாமிரவருணி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பேரணி தொடங்கியது. தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அ.ஜோசப் கென்னடி வரவேற்றார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கொ.அ.அப்துல்ஹமீது முன்னிலை வகித்தார். பேரணியைத் தொடங்கி வைத்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது:

பொதிகை மலையின் பூங்குளத்தில் உருவாகி 147 கி.மீ. பாய்ந்து சென்று வங்கக் கடலில் கலக்கும் தாமிரவருணி நதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். தாமிரத்தாதுவின் தன்மை கொண்ட இந்தத் தண்ணீர் மக்களின் குடிநீர்த் தேவையையும், ஏராளமான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

தாமிரவருணியில் தொழிற்சாலை கழிவுகள், ஓடைக்கழிவுகள் சேர்வதாக புகார்கள் வருகின்றன. தாமிரவருணியைப் பாதுகாக்கவும், கரையோரங்களில் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கவும் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். ஆற்றில் பாயும் நீரை சுத்திகரித்துக் குடிக்க வேண்டிய அவல நிலை உருவாகிவிட்டது. ஆனால், ஆற்றுநீரை அப்படியே குடிக்கும் அளவுக்கு ஆறுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பொதுமக்களின் பெரும் ஒத்துழைப்பு அவசியம். தாமிரவருணி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான ஒத்துழைப்புகளை அளிக்கும் என்றார் அவர்.

வ.உ.சி. திடலில் தொடங்கியப் பேரணி திருவனந்தபுரம் சாலை, நூற்றாண்டு மண்டபம், ராமசாமிகோயில் திடல் வழியாக மீண்டும் மைதானத்தை அடைந்தது. இந்தப் பேரணியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், துணை ஆணையர் து.பெ.சுரேஷ்குமார், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சி.விஜயாம்பிகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, அந்தோனிகுரூஸ் அடிகளார், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் டி.ஏ.பிரபாகர் உள்பட மாணவர்-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஓயிலாட்டம்:

பேரணியில் பங்கேற்ற மாணவர்-மாணவிகள் ஆறின்றி சோறில்லை... ஆறின்றி ஊரில்லை என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வுப் பதாகைகளுடன் பங்கேற்றனர். ஒயிலாட்டம், சிலம்பம் போன்றவை பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. தாமிரவருணி நதியின் இப்போதைய நிலையையும், அதில் கலக்கும் கழிவுகள் குறித்து விளக்கவும் விழிப்புணர்வு வாகனம் பேரணியின் முன்பு சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →