முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங் களின் செயல்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்ட நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுச் சூழல் மன்றங்களின் செயல்பாடுகளுக்காக மொத்தம் ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:02 AM

விருதுநகர் மாவட்ட நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுச் சூழல் மன்றங்களின் செயல்பாடுகளுக்காக மொத்தம் ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளின் விருப்பத்துடன் சுற்றுச்சூழல் மன்றம் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, இந்த மன்றம் நடுநிலைப்பள்ளிகளிலும் தொடங்கப்பட்டு சுற்றுச்சூழல் பராமரிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 100 அரசு மற்றும் தனியார் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், அதை தண்ணீர் விட்டு பராமரித்தல் போன்ற பணிகளை மாணவ, மாணவிகளை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.

Advertisement

இதை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் பசுமை தினம் கொண்டாடுதல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருத்தல், மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவு, கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.2500 வீதம் 100 நடுநிலைப்பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகைக்கான காசோலையை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட சுற்றுச் சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணிராஜன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.