முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி, நாட்டிய உற்சவமாக திகழ்கிறது: வழக்குரைஞர் ஏ.சம்பந்தம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி பக்திபூர்வமான விழாவாகவும், நாட்டிய உற்சவமாக திகழ்கிறது என நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி பக்திபூர்வமான விழாவாகவும், நாட்டிய உற்சவமாக திகழ்கிறது என நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்,

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியான கடந்த பிப்.27-ம் தேதி தொடங்கிய 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா திங்கள்கிழமை நிறைவு பெற்றது. விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் பேசியதாவது:

நாட்டியக்கலை கிராமங்கள் மற்றும் கோயில்களில் இருந்து நகரங்களுக்கு சென்றுவிட்டது. தெய்வீகத்தன்மை போய்விடக்கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது இந்த நாட்டியாஞ்சலி. நாட்டியாஞ்சலி அரசு ஏற்று நடத்த வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஸ்ரீநடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது அரசு எப்படி ஏற்று நடத்த முடியும். இந்த நாட்டியாஞ்சலியை எந்த தீயசக்தியுடன் அழித்துவிட முடியாது. நல்ல சக்தியை எந்த தீயசக்தியும் அழிக்க முடியாது என வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்.

விழாவிற்கு த.செல்வரத்தின தீட்சிதர் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியது: சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் நாட்டிய அஞ்சலி செலுத்துவது மிக சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜமூர்த்தியின் பாவம் என்னவென்றால், நடராஜர் தானே தன்னுடைய நாட்டியத்திற்கு ஒலியையும் எழுப்பிக் கொண்டும், ஜதியுடன் ரசிகையான ஸ்ரீசிவகாமசுந்தரியுடன் நாட்டியமாடுகிறார் என்பதால்தான் அச்சிறப்பு என செல்வரத்தின தீட்சிதர் தெரிவித்தார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் வரவேற்றார். விழாவில் துணைத் தலைவர் வி.பாலதண்டாயுதம், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், இணைச் செயலாளர் ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்த மார்கி மது சாக்கியர் குழுவினரின் கூடியாட்டம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. துபாயைச் சேர்ந்த விம்மி ஈஸ்வரின் கூச்சுப்புடி நடனம் சிறப்பாக இருந்தது. மேலும் ஜெயங்கொண்டம் இசை, பரதநாட்டிய கலைக்கூடம் மாணவியர்கள், சிதம்பரம் ஸ்ரீநடராஜ நாட்டியாலயா மாணவியர்கள், பெங்களூர் பூர்ணாசுரேஷ், கோவை ஈஷா மைய மாணவியர்கள், பிரான்ஸ் ஸ்வாதி ராகவன், புதுச்சேரி சலங்கை நாட்டியப்பள்ளி மாணவியர்கள், சென்னை அக்ட்சயா ஆர்ட்ஸ் மாணவியர்கள், பெங்களூர் சின்னிஜோஷி. நாட்டிய கலாமந்திர், பெங்களூர் கலா சம்பூர்ணா, புதுச்சேரி நட்சத்திர நாட்டியாலயா மாணவியர்கள், நெய்வேலி வர்ஷா ரமேஷ் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.