முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுக்கூட்டத்தில் திட்டங்களை முதல்வர் அறிவிப்பாரா? சிதம்பரம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

சிதம்பரம் நகரில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசவுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:37 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசவுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்புகளை வெளியிடுவாரா என மக்கள் மிகுந்த எதிர்ப்பார்பில் உள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்றாக திகழ்கிறது. அதுபோன்று பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. விவசாயத்தையே நம்பி வாழும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள், வறட்சி, வெள்ளம், புயல் என மாறி, மாறி பாதிப்படைந்து வேதனையில் உள்ளனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது முதன்முறையாக ஜெயலலிதா அரசு வறட்சிக்கு நிவாரணம் வழங்கியதினால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்று சரியான முறையில் நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது.

மேலும் காவிரி டெல்டா கடை, மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள நீர்நிலைகளில், நீராதாரத்தை பெருக்கு அரசு எவ்வித திட்டத்தையும் அறிவிக்கவில்லை என நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் வேதனையாகும். கடந்த ஆண்டு வீராணம் ஏரியை தூர்வாருவதற்கு தமிழக முதல்வர் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் நிதிஒதுக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் ஆர்வம் காட்டும் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன அதிகாரிகள், விவசாயிகளின் பாசனத்திற்கு நீர் திறந்துவிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் உள்ளது. மேலும் வாய்க்கால், ஆறுகள் சரியான முறையில் தூர்வாரி பராமரிக்கப்படவில்லை என்பது விவசாயிகள் குற்றச்சாட்டுகளாகும். மேலும் வடவாற்றிலும், வெள்ளாற்றிலும் கடல் உப்புநீர் உள்பகுந்து குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்

அரசு மருத்துவக்கல்லுரி, மகளிர் கல்லூரி: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியும், சிதம்பரம் நகரில் மகளிர் கல்லூரியும், சி.முட்லூரில் சென்ட் தொழிற்சாலையும், ஜெயங்கொண்டத்தில் பருத்தி கொள்முதல் நிலையமும் தொடங்க வேண்டும், ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வார வேண்டும், புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் பழுதடைந்துள்ளதால், புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும். இக்கோரிக்கைகள் குறித்த தமிழக முதல்வர் திட்டங்களை அறிவிப்பார் என பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.