முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்களை  உதவி தேர்தல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அறிந்து வைத்திருக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோர்

Updated On : 13 மார்ச், 2014 at 3:51 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:12 AM

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கான மக்களவை தேர்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசுகையில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை தொடர்புடையவர்களுக்கு விடுபடாமல் வழங்க வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதி, சுகாதார வளாகம் மற்றும் வாக்குச் சாவடி மைய எண் ஆகியவைகள் குறிக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அரசு கட்டடங்கள், பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் இருந்தால் தொடர்புடையவர்கள் செலவில் அகற்றம் செய்ய வலியுறுத்த வேண்டும்.

Advertisement

    அவ்வாறு குறிப்பிட்ட நாள்களில் செய்யவிட்டால் அரசு செலவில் உடனே அகற்றி, அந்த செலவினத்தை அவர்களிடம் இருந்து வசூல் செய்யவும் அல்லது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்க வேண்டும். அதோடு, இதன் விவரங்களை தேர்தல் நடத்தை ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு  மையங்களை தேர்வு செய்ய வேண்டும். வாக்கு பதிவு அலுவலர்களுக்கு ஆணை வழங்கும் போதே அஞ்சல் வாக்கு சீட்டு தேர்தல் பணிச்சான்று வழங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்க வேண்டும். அஞ்சல் வாக்குச் சீட்டுக்களில் அலுவலர்கள் பதிவு செய்வதற்கான மறைவிடம் அமைக்க வேண்டும்.

    இதுபோன்ற நடமுறைகளை பார்வையிடுவதற்கு அரசியல் கட்சியினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் அவர்களது தொகுதிகள் குறித்தும், வாக்குச் சாவடி மையங்களின் விவரங்கள் குறித்து நன்கறிந்து கொள்வது அவசியம் ஆகும். அதோடு, சட்ட ஒழுங்கு பாதிக்கக் கூடிய  பிரச்னைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்நேரத்திலும் தேர்தல் உயர் அலுவலர்கள் கேட்கும் விவரங்களை அளிப்பதற்கு தயராக இருக்க வேண்டும் என அலுவலர்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார். 

     இந்தக் கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதயகுமார், கீர்த்திகா பரியதர்ஷினி, வட்டாட்சியர்கள் மற்றும் வாக்குச் சாவடி பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.