கூட்டணி கட்சிக்கு தொடர்ந்து சிதம்பரம் தொகுதி ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுகவினர்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மீண்டும் அக்கட்சி தலைவர் தொல்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வருவதால், திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மீண்டும் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிதம்பரம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதால் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி 1999, 2004, 2009 ஆகிய மூன்று தேர்தலாக கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதால் திமுக போட்டியிடவில்லை. தற்போது 2014 தேர்தலிலும் திமுக, தனது கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. 1962-ல் திமுக சார்பில் தில்லைவில்லாளன் போட்டியிட்டு குறைந்து வாக்கு வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கனகசபையிடம் தோல்வியுற்றார். 1967-ல் இளையபெருமாளை தோற்கடித்து, திமுக வேட்பாளர் வி.மாயவன் வெற்றி பெற்றார். 1977-ல் திமுக வேட்பாளர் என்.ராஜாங்கத்தை, அதிமுக வேட்பாளர் ஏ.முருகேசன் தோற்கடித்தார். 1980-ல் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வே.குழந்தைவேலு வெற்றி பெற்றார்.
1984-ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கண்ணபிரானை, காங்கிரஸ் வேட்பாளர் பி.வள்ளல்பெருமான் தோற்கடித்தார். 1989-ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.அய்யாசாமியை, காங்கிரஸ் வேட்பாளர் பி.வள்ளல்பெருமான் தோற்கடித்தார். 1991-ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுலோச்சனா அய்யாசாமியை, காங்கிரஸ் வேட்பாளர் பி.வள்ளல்பெருமான் தோற்கடித்தார். 1992-ல் தான் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.கணேசன், பாமக வேட்பாளர் ஆர்.எழில்மலையை விட கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 1994-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.கணேசன், பாமக வேட்பாளர் தலித் எழில்மலையிடம் தோல்வியுற்றார். அதன் பின்னர் இத்தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. தனது கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி வருகிறது.
தொடர்ந்து கடந்த 3 நாடாளுமன்றத் தேர்தலிலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை.கி.சரவணனுக்கு அடுத்து, கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருவதால், திமுகவினர் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். 1980-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வே.குழந்தைவேலு, கடும் அதிருப்திக்குள்ளாகி சமீபத்தில் கொடநாட்டில் தங்கியிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வத்துடன் பணம் கட்டி நேர்காணலுக்கு சென்ற திமுகவினர் மீண்டும் இத்தொகுதி கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு பின்னர் நடைபெற்ற கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், நகர, ஒன்றிய அளவில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் திமுகவினரின் அதிருப்தி எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது.