விருதுநகர் : 75 ஆண்டுகளாக கட்சிக் கொடிகள், தோரணங்கள் கட்டாத விநோத கிராமம்
விருதுநகர் அருகே கடந்த 75 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் தோரணங்கள், கொடிகள் கட்டாமலும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற கிராமமாகவும் மருதநத்தம் விளங்கி வருகிறது.
விருதுநகர் அருகே கடந்த 75 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் தோரணங்கள், கொடிகள் கட்டாமலும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற கிராமமாகவும் மருதநத்தம் விளங்கி வருகிறது.
ஒவ்வொரு கிராமங்களிலும் கொடிக்கம்பங்கள், தோரணங்கள், சாதி சங்க தலைவர்களின் படங்கள் இல்லாத கிராமங்களை காண்பது அறிது. ஆனால், இதற்கு மாற்றாக விருதுநகர் - அழகாபுரி சாலையில் செங்குன்றாபுரம் விலக்கிலிருந்து 2 கி.மீ தூரத்தில் மருதநத்தம் கிராமம் உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
அனைவருமே பிரச்னையி்ல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு மாறாக கொடிக்கம்பங்கள், சாதி சங்கங்களின் போர்டுகள், அரசியல் கட்சிகளின் தோரணங்கள் இல்லாமலும் முற்றிலும் வித்தியாசமான கிராமமாகவும் இருந்து வருகிறது.
Advertisement
தற்போது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் அரசியல் கட்சிகளின் ஆதாரவாளர்களால் கொடிக்கம்பங்கள், தோரணங்கள் கட்டி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ஆனால் இங்கு மட்டும் கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே கிராம பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பொது இடங்களில், தெருக்களில் அரசியல் கட்சியினரின் தோரணங்கள், கொடிக்கம்பங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.
பல்வேறு சமுதாயத்தினர் வாழ்ந்து வரும் கிராமத்தில் அரசியல் காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படக்கூடாது. இதற்காக ஊரின் பொதுமக்களின் அனைவரின் ஒத்துழைப்புடனும் இதுவரையில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றனர். அதே சமயத்தில் இங்குள்ள ஒவ்வொருவரும் எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்களாக இருந்து வாக்களிக்கலாம். இதற்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அதேபோல், இக்கிராம மக்கள் அரசியல் ஜனநாயக கடமையாற்றுவதில் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் இதுவரையில் பிரச்னைகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நாட்டாமை தனிந்திரன் என்பவர் கூறுகையில், அனைத்து சமுதாய மக்களும் சகோதரர்களாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். ஜாதி மற்றும் அரசியல் காரணங்களுக்காக எவ்வித பிரச்னையும் எழுக்கூடாது என்பதற்காவே கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் கொடிகளை கட்டி வந்தனர். இதையடுத்து ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடனும் பேசியதோடு, கட்டுப்பாடுகளை பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கு எவ்வித தடையும் கிடையாது. அரசியல் விழிப்புணர்வுவோடு ஜனநாயக கடமையாற்றுவதில், இங்குள்ளவர்கள் வெவ்வோறு கட்சியின் ஆதாரவளார்களாக இருந்தாலும் வாக்களிக்க மட்டும் தவறுவதில்லை என தனிந்திரன் தெரிவித்தார். இதுபோன்று அனைத்து கிராமங்களும் பிரச்னை இல்லாமல் இருந்தால் தேர்தல் விதிமுறைகளை வகுக்க வேண்டிய அவசியமிருக்காது என்றார்.