முகப்பு
தற்போதைய செய்திகள்

மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க உண்மையில் பாடுபடுவது கம்யூனிஸ்ட் கட்சிதான்: ஜி.ராமகிருஷ்ணன்

பழனி திண்டுக்கல்ரோடு ஸ்ரீஜெயசங்கரமஹாலில் திங்கள்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பேரவைக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய உண்மையிலேயே பாடுபடுவது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் என சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

பழனி திண்டுக்கல்ரோடு ஸ்ரீஜெயசங்கரமஹாலில் திங்கள்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பேரவைக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை அறிமுகம் செய்து வைத்தும், தேர்தல் பணிகள் திட்டமிடுதல் பற்றியும் கட்சியினர் கலந்தாலோசனை நடத்தினர்.  கூட்டத்துக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பழனி சிபிஐ ஒன்றிய செயலாளர் மணி முன்னிலை வகித்தார்.  சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரதராஜன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சந்தானம் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.  சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், பாஜ, காங்கிரஸ் இரு கட்சிகளுமே அடித்தட்டு மக்களுக்கு நல்லதை செய்வது போன்ற மாயையை செய்து கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, தாராளமயமாக்கல் போன்றவற்றிற்கு முன்மொழிந்தது பாஜக அரசு.  அதை அமல்படுத்தியது காங்கிரஸ்.   உண்மையாக மதச்சார்பற்ற ஆட்சியை மத்தியில் அமைக்க பாடுபடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளே.

அக்.30ல் கம்யூனிஸ்ட் கட்சி டெல்லியில் நடத்திய கூட்டத்தில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்று மதச்சார்பற்ற ஆட்சியை அமர்த்த உறுதி பூண்டுள்ளது. தனியார் எரிவாயு நிறுவனம் தற்போது மாதம் சுமார் இரண்டு இலட்சம் கோடி சம்பாதிக்க 100 சதம் கேஸ் விலை உயர்த்தியதை ஏன் மோடியோ, பாஜக கட்சியே கேட்கவில்லை.  தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து பேசும். கேரளாவில் இம்முறை கம்யூனிஸ்ட் அபரிமிதமான வெற்றியை பெறும்.  மேற்குவங்கத்தில் முறையான தேர்தல் நடந்தால் பாதிக்குமேல் வெற்றி பெறுவோம்.  அங்கு மம்தா பானர்ஜி அரசால் கட்சியினர் உயிரை பணயம் வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  குஜராத்தில் மோடி ஆட்சியின் போது போலி என்கவுன்டர் நடத்தியதாக ஐபிஎஸ் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மோடி என்ன பதில் சொல்கிறார் என பேசினார்.

நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், பழனி நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.