சிதம்பரம் அருகே அரசு பஸ், கார் மோதல்: பெண் சாவு, மூவர் காயம்
சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், பொலிரோ காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மூவர் காயமுற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையில் தீர்த்தாம்பாளையம் எனுமிடத்தில் வெள்ளாற்று பாலம் அருகே புதன்கிழமை அதிகாலை பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரிலிருந்து வந்த பொலிரோ கார், முன்புறம் மோட்டார் சைக்கிளில் சென்ற புளி வியாபாரி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, எதிரே கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பேருந்து மீது மோதி்யது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த ஷாகீர் மனைவி ஷைலா (50) சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணம் செய்த டிரைவர் அசருதீன் (21), ஷாகீர் (55), முகமதுயாகூப் (64), ஜெகதார்நாச்சியார் (55) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நால்வரும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டுக்கோட்டை மதுக்கூரிலிலிருந்து பொலிரோ காரில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஷாகீர் குடும்பத்துடன் சென்றதாக தெரியவருகிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.