முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்மட்டம் குறைவு எதிரொலி: பாபநாசம் அணை மூடல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தற்போதைய

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 48 அடியாக குறைந்ததை அடுத்து அணை முடப்பட்டது. குடிநீர் தேவைக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தற்போதைய அணைகளின் நீர் இருப்பை கொண்டு ஏப்ரல், மே மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71.84 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 61.48 அடியாகவும், கடனாநதி அணையின் நீ்ர்மட்டம் 34.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும் இருந்தது.

அணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 66.20 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 28 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 8.06 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கருப்பாநதி, அடவிநயினார், கொடுமுடியாறு  அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக குறைந்ததை அடுத்து அணை மூடப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இம்மாவட்டத்தில் குறைந்த கொள்ளளவை கொண்ட கடனாநதி, ராமநதி மற்றும் 
அடவிநயினார், கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் இந்த அணைகளும்
மூடப்பட்டன. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 29.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 29.03 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும் இருந்தது.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால்தான் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். அதுவரை அணைகளின் தற்போதுள்ள நீர் இருப்பை வைத்து இவ்விரு மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டதால் அங்குள்ள நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →