முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே காட்டுயானைகள் தாக்கியதில் ஒருவர் பலி

பழனியை அடுத்த மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு என ஏராளமான அணைக்கட்டுகள் உள்ளது. இப்பகுதியில் வளம்மிக்க விவசாய நிலங்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

பழனி அருகே காட்டுயானைகள் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியானார்.

பழனியை அடுத்த மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு என ஏராளமான அணைக்கட்டுகள் உள்ளது. இப்பகுதியில் வளம்மிக்க விவசாய நிலங்கள் உள்ளன.  தற்போது இப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக காட்டுயானைகள் உணவு தேடி விளைநிலங்களை நாடி வருகின்றன.  இதனால் இப்பகுதியில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டு வருகிறது.  இதே நிலை அடிவாரப்பகுதியில் உள்ள எல்லா விளைநிலங்களுக்குமே ஏற்பட்டுள்ளதால் காட்டுயானைகள் அச்சம் காரணமாக யாரும் மாலை நேரங்களிலும், அதிகாலையிலும் செல்ல அஞ்சி வருகின்றனர். 

பழனி அருகே பழைய ஆயக்குடி 2வது வார்டை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் சந்திரன்(50). இவருக்கு காட்டுராணி என்ற மனைவியும், மகன் ஒருவரும் உள்ளனர்.  சந்திரன் ஆயக்குடியில் இருந்து சட்டப்பாறை செல்லும் வழியில் பாப்பன்குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் அங்கு விவசாயம் செய்து வந்துள்ளார். சனிக்கிழமை அதிகாலை சந்திரன் விவசாய நிலத்துக்கு வந்திருந்தபோது அங்கு வந்த காட்டுயானைகள் சில அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

சூரிய உதயத்துக்கு பிறகு அப்பகுதியில் வந்தவர்கள் சந்திரன் இறந்திருந்ததை பார்த்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்தில் ஆயக்குடி போலீஸார், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ரேஞ்சர்கள் கணேசன், பரதன், பாரஸ்ட்டர் சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் வந்து உடனடியாக உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். 

மேலும் வனத்துறை சார்பில் இறந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.  கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசத்தால் ஏராளமான காட்டுயானைகளும், மனித உயிர்களும் பலியாகி பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.  அதே போல மீண்டும் நடைபெறாவண்ணம் வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிகளுக்கு அனுப்பி அவற்றுக்கு போதிய குடிநீர், உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.