அடைமழையால் மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு: வியாபாரிகள் ஏமாற்றம்
அடை மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாடுகள், எருமைகள் குறைவாக வந்தன.
அடை மழை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாடுகள், எருமைகள் குறைவாக வந்தன.
வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடும் இச்சந்தையில் மாடுகள், எருமைகளை விற்பனை செய்ய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
மாடுகள், எருமைகளை கொள்முதல் செய்ய கோவா, மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம். வறட்சி, கோடைகாலம் உள்ளிட்ட காரணங்களால் இச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் மாடுகள், எருமைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், இந்த வாரம் மாடுகள், எருமைகள் வரத்து குறைந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருவதால் இச்சந்தைக்கு மாடுகள், எருமைகளை கொண்டுவர விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், மகாராஷ்டிரம், ஆந்திரம், கேரளம், கோவா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, கடந்த வாரம் 450 மாடுகள், 300 எருமைகள் வந்திருந்தன. மழை காரணமாக இந்த வாரம் 350 மாடுகள், 250 எருமைகள் மட்டும் தான் வந்திருந்தன.
மாடு ரூ.14,000 முதல் ரூ.32,000 வரையும், எருமை ரூ.16,000 முதல் ரூ.33,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது என்றார்.