முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலையத்தைக் கடந்து சென்ற ரயிலுக்கு பயணச்சீட்டு வினியோகம்

நிலையத்தை விட்டு கடந்து சென்ற ரயிலுக்கு 15 நிமிடங்களுக்குப் பின்னர் பயணச்சீட்டு வினியோகம் செய்ததால் பயணி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. ரயில்வே நிர்வாகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

நிலையத்தை விட்டு கடந்து சென்ற ரயிலுக்கு 15 நிமிடங்களுக்குப் பின்னர் பயணச்சீட்டு வினியோகம் செய்ததால் பயணி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. ரயில்வே நிர்வாகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து விருதுநகருக்கு சிவகங்கை வழியாக நாள்தோறும் (சனிக்கிழமை தவிர) சாதாரணக் கட்டணத்தில் பயணிகள் ரயில் (பாசஞ்சர்) இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வேயின் அட்டவணை நேரப்படி இந்த ரயில் சிவகங்கை ரயில் நிலையத்திற்கு மாலை 6.55க்கு வந்து 6.57 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.திங்கள்கிழமை சஞ்சய் நகரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரின் மனைவி விருதுநகர் செல்வதற்காக இரவு 7.25 மணிக்கு சிவகங்கை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மையத்தில் விருதுநகர் செல்வதற்கு, இந்த குறிப்பிட்ட ரயிலுக்கான பயணச்சீட்டைக் கேட்டுள்ளார். இதற்காக ரூ.20 பயணக் கட்டணம் செலுத்தி சீட்டைப் பெற்றுள்ளார். கணினியில் நேரம் அச்சிட்டு (நேரம் 19.28) வழங்கும் வகையிலான பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த ரயில் அட்டவணை நேரப்படி மாலை 6.55க்குப் பதிலாக இரவு 7.11 மணிக்கு வந்து 7.13 மணிக்கு சிவகங்கை ரயில் நிலையத்தைவிட்டு கிளம்பிச் சென்று விட்டது. ரயில் வந்த நேரம் மற்றும் கிளம்பிச் சென்ற நேரம் சிவகங்கை ரயில் நிலைய அலுவலரின் பதிவேட்டுப் புத்தகத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

சிவகங்கை வழியாக மானாமதுரை மார்க்கம் செல்வதற்கு இந்த ரயிலுக்குப் பின்னர் வேறு ரயில் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. ரயில் நிலைய அலுவலர் அறையில் தான் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

விருதுநகருக்கான ரயில் சென்று சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர் ரயில் சென்ற விவரம் தெரியாமல் பயணச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பயணிக்கும் ரயில் சென்ற விவரம் தெரியாததால் இரவு 8.30 மணி வரை ரயிலுக்காக காத்திருந்த அவர் பின்னர் பயணிகள் ரயில் வருகை குறித்து கேட்ட போது இரவு 7.13 மணிக்கே சென்று விட்டது அவருக்குத் தெரிய வந்தது.

ரயில் சென்றதற்குப் பின்னர் பயணச் சீட்டு வழங்கியது குறித்தும், செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தரும்படி கேட்ட போது சீட்டு வழங்கிய ஊழியர் முறையான பதிலைத் தெரிவிக்க மறுத்ததுடன் கட்டணத்தைத் திரும்ப வழங்க மறுத்துவிட்டாராம். முன் பதவு இல்லாத பயணச் சீட்டை ரயில் சென்ற 3 மணி நேரத்திற்குள் திரும்ப ஒப்படைத்தால் ரூ.15 பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்கும் என்பது விதி.

கட்டணத்தைத் திரும்ப வழங்காமலும், ரயில் சென்ற விவரம் தெரியாமல் பயணச் சீட்டு வழங்கி அலைக்கழித்ததாகவும் ரயில்வே நிர்வாகம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பெண் பயணி தினமணிக்கு அளித்த பேட்டியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments