நெல்லையில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 2 மையங்களில் 183 பேர் எழுதினர்
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் என்பதால் தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 2 மையங்களில் மொத்தம் 183 பேர் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதினர்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் என்பதால் தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டு, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் 6 மையங்கள் உள்பட தமிழகத்தில் மொத்தம் 39 மையங்களில் இந்தத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 194 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, சாராள்டக்கர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனுமதிச்சீட்டு பெற்றவர்களில் 183 பேர் மட்டுமே தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதினர்.தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பள்ளிகளில் இன்று பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களும் விநியோகிக்கப்பட்டதால் கூடுதலாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு எழுத வருவோருக்கு இடையூறு இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. தேர்வினை மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் நேரில் சென்று கண்காணித்தனர்.