ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மறியல், ஆர்ப்பாட்டம்: 36 பேர் கைது
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு கண்டனம் தெரிவி்த்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில்
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு கண்டனம் தெரிவி்த்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட முயன்ற 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து திங்கள்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபட்ச உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபட்சவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்ததற்கு தமிழகத்தில் அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இதனிடையே ராஜபட்ச வருகைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
36 பேர் கைது: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்தது. இதையடுத்து சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட முயன்ற கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணிமாவீரன் தலைமையில் இளைஞரணி செயலர் கிங்தேவந்திரன், கணேஷ்பண்ணையார், துரை பாண்டியன் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து சந்திப்பு ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் வண்ணை முருகன், மாவட்டச் செயலர் யாக்கோபு உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்: பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈ. தமிழீழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக மாநில துணைப் பொதுச்செயலர்அ. வியனரசு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் நிர்வாகி பீட்டர், உலகத் தமிழச் சங்க நிர்வாகி உத்திரம், புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த முத்து, தமிழக மக்கள் ஜனநாயக ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலர் அப்துல்ஜப்பார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர் ஆர்ப்பாட்டம்: பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்ற முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை வழக்குரைஞர்கள் தமிழ் மன்றப் பொருளாளர் வ. மணிகண்டன் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் இரா.சி. தங்கசாமி தொடங்கி வைத்தார். செயலர் ம.சு. சுதர்சன் முன்னிலை வகித்தார். இதில் வழக்குரைஞர்கள் சு. அருணாசலம், பி. மேத்தாமைதீன், எம்.எஸ். மணி, லியோன், பொ. இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.