கார் பருவ சாகுபடி: பருவ மழையை எதிர்நோக்கும் தாமிரவருணி விவசாயிகள்
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவ சாகுபடிகளை தொடங்க அணைகளில் இருந்து ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறப்பது குறித்து அறிவிக்கப்படாத நிலையில்,
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவ சாகுபடிகளை தொடங்க அணைகளில் இருந்து ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறப்பது குறித்து அறிவிக்கப்படாத நிலையில், தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தாமிரவருணி வடிநில பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பாபநாசம் அணை பாசனத்தில் இவ்விரு மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்களும், மணிமுத்தாறு அணை பாசனத்தில் பிரதான கால்வாய், பெருங்கால் பாசனத்தில் சுமார் 28,000 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகிறது. இதேபோல் கடனாநதி அணை பாசனத்தில் 9615 ஏக்கர் நிலங்களும், ராமநதி அணைப் பாசனத்தில் 4,943.51 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகிறது.
இப்பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக ஜூன் மாதம் முதல் தேதியில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததால் அணைகளின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறப்பதில் தாமதமாகிறது.அணைகளில் இருந்து பாசனத்திற்கு தாமதமாக தண்ணீர் திறப்பதால், அறுவடை செய்யும் பருவத்தில் பருவம் தவறி பெய்யும் மழை காலங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கும் நிலை உள்ளது. அணைகளில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காத காரணத்தால் பருவ காலம் மாறுகிறது. இதன் காரணமாக நெல், வாழைப் பயிர்கள் இயற்கை சீற்றங்களில் சேதமடைந்து விவசாயிகளுக்கு இழப்பை தருகிறது.
அணைகளின் நீர் இருப்பு: வெள்ளிக்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.78 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.47 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 57.15 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 62.75 அடியாகவும் உள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இருப்பதால் கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்க அணைகளில் இருந்து ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அணைகளில் நீர் இருப்பு இருந்தபோதிலும், இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணைகளில் நீரை சேமித்து வைக்க வேண்டியுள்ளது. ஆகவே பருவ மழை ஆரம்பித்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய பிறகுதான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
பருவ மழை தொடங்குமா? தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். தாமிரவருணி பாசனத்தில் ஜூன் முதல் தேதியில் பாபநாசம் அணையில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட சில தினங்களில் பருவ மழை தொடங்கும் என்பது ஐதீகம். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி அணைத் திறக்கப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக அணைகளில் முறையாக ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தாமிரவருணி பாசனத்தில் பருவ தவறி பெய்யும் மழையால் சாகுபடி செய்வதிலும் சிக்கல் எழுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பிறகுதான் கார் பருவ சாகுபடிகளை தொடங்க முடியும் என்ற நிலையில் மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.