முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் புதிய சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம் வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் புதிய சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம் வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தமிழகஅரசு வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடியை சந்தித்து கடிதம் அளித்து வலியுறுத்தினார்.

சிதம்பரம் பகுதியில் கடந்த அக்.31-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழகஅரசு வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடியை கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து மழை பாதிப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அளித்தார். கடித விபரம்: சமீபத்திய வடகிழக்கு பருவமழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி வட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாசன வடிகால், வாய்க்கால்கள் தூர் வாரப்படாததாலும், ஏரி, குளங்கள் மராமத்து செய்யாததாலும். ஷட்டர்கள் முறையாக இல்லாததாலும் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. பல இடங்களில் தண்ணீர் வருவதற்கு வழியே இல்லை.

சிறிய வாய்க்கால்கள் தூர் வாருவது, உடைந்த மதகுகளை சீர் செய்வது போன்ற பணிகள் கூட நடைபெறவில்லை. இத்தகைய காரணங்காளாளேயே சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையின் மீதமுள்ள காலங்களில் அடைமழை பெய்தால், அனேகமாக சாகுபடிகள் மொத்தமாக அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நகரம் உள்ளிட்ட பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலைநகர் உள்ளிட்ட நகரங்களின் அனைத்து சாலைகளும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் விளைநிலங்களில் நீர் தேங்கி நிற்கிறது. சம்பா நெல் நாற்றாங்கால் நீரில் மூழ்கி அழுகி வீணாகிவிட்டது. இதனால் சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் கோடை காலச்சில் சிதம்பரம். காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் அனைத்து பாசன வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள், ஏரிகள் தூர்வாரியும், ஷட்டர்களை சீரமைத்தும் ஒழுங்குபடுத்திட சிறப்பு திட்டம் உருவாக்கி நிதிஅளித்திட வேண்டும், இப்பணிகளில் ஊழில், முறைகேடுகள் இல்லாமல் விவசாய அமைப்புகளின் கண்காணிப்போடு நிறைவேற்றிட வேண்டும். வாய்க்கால்களை அடைத்து கொண்டுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும். கடை பரவாாற்று இருபக்க கரைகளும் உயர்த்தப்படாததால் புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள 50 கிராமங்களிலும், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 20 கிராமங்களும் பாதிக்க்கப்பட்டுள்ளது. எனவே பரவனாற்று கரையை உயர்த்த வேண்டும். பொன்னேரியை தூர்வாரிட வேண்டும். கடந்த ஆண்டை போல அனைத்து சாகுபடிகளுக்கு அரசு பயிர் காப்பீடு செய்து, பிரிமியம் தொகையை செலுத்த வேண்டும். சிதம்பரம் புறவழிச்சாலையில் போதுமான வடிகால் இல்லாததால் நீர் தேங்கி சுமார் 30 கிராமங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே புறவழிச்சாலைகளில் உரிய வடிகால் வசதிகளை செய்திட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.