ரூ.1.25 கோடி செலவில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் தேர் புதுப்பிப்பு: பச்சையப்பன் அறக்கட்டளை நிதிக்குழுத் தலைவர் ஆய்வு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ரூ.1.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வரும் ஸ்ரீநடராஜர் தேர் புணரமைப்பு பணியினை, பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினரும், நிதிக்குழுத் தலைவருமான
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ரூ.1.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வரும் ஸ்ரீநடராஜர் தேர் புணரமைப்பு பணியினை, பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினரும், நிதிக்குழுத் தலைவருமான பிரதாப்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பச்சையப்பன் அறக்கட்டளை மூலம் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் ஸ்ரீநடராஜர் தேர் முற்றிலுமாக புணரமைக்கும் பணியை பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினரும், நிதிக்குழுத் தலைவருமான பிரதாப்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு, தேர் புணரமைத்து வரும் திருவாரூரைச் சேர்ந்த சிவனேசன் ஸ்தபதியிடன் பணிகள் குறித்து கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார். அவருடன் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கரதீட்சிதர், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பச்சையப்பன் பள்ளி தலைமை ஆசிரியர் சி.என்.சிங்காரவேலு, நகரமன்ற உறுப்பினர் வி.செந்தில்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் நிதிக்குழுத் தலைவர் பிரதாப்குமார் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு, 375 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளல் பச்சையப்ப முதலியாரால் தேர்கள் காணிக்கையாக வழங்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. தேரை கோயிலுக்காக அர்ப்பணித்த பச்சையப்பா முதலியார் கோயிலுக்கான ஒரு காலபூஜை செலவையும் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பச்சையப்பா அறக்கட்டளை மூலம் ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன திருவிழாக்களின் போது தேர்களை கட்டுவது, மண்டகப்படி செய்வது, ஒரு கால பூஜை செலவு ஆகியவை தொன்று, தொட்டு செய்யப்பட்டு வருகிறது. சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு பச்சையப்ப முதலியாரே நேரடியாக களம் இறங்கி தேர்களை புணரமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேர்கள் பழுதுற்று ஆபத்து ஏற்படும் நிலையில் வலம் வருவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து கடந்த திருவிழாக்களின் போது கடலூர் மாவட்ட ஆட்சியரால் தேர்கள் வலம் வர அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சிவபக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் தேர்கள் தற்காலிகமாக சீரமைத்து கடந்த திருவிழாக்களின் போது தேரோட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வரின் ஆணையின் பேரில் பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தீவிர முயற்சியால் ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாள் ஆகிய இருவரது தேர்களை முற்றுலுமாக புணரமைக்க ரூ.1 கோடி 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த திருவிழாவின் போது சிவகாமசுந்தரி அம்மன் தேர் புணரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் ஸ்ரீநடராஜர் தேர் புணரமைப்பு பணி செய்யப்பட்டு வருகிற ஜன.3-ம் தேதி நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத்தின் போது தேரோட்டத்தின் போது வெள்ளோட்டம் விடப்படும் என பச்சையப்பன் அறக்கட்டளை நிதிக்குழுத் தலைவர் பிரதாப்குமார் தெரிவித்தார்.