வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நெல்லையில் ரூ.5 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனை முடக்கம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ. 5,000 கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் அக். 2012 இல் முடிவடைந்து விட்ட நிலையில் தொடர்ந்து 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. 25 சதவீதம் ஊதியம் உயர்வு, வாரத்தில் 5 தினங்கள் வேலை, அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரம், குடும்ப ஓய்வூதியத்தில் முன்னேற்றம், ஒவ்வொரு ஊதிய உயர்வின் போதும் மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தன.
இது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் புதன்கிழமை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 182 வங்கிக் கிளைகளில் பணி செய்யும் 1,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்: பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பாரத ஸ்டேட் வங்கி
முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய கூட்டமைப்பின ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டலச் செயலர் எட்வின், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ரெங்கன், ஆகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகி ராம்நாத், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி முருகன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டிச. 2 இல் மீண்டும் வேலைநிறுத்தம்:
9 ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் வங்கி ஊழியர்களின் கோரிக்கையை வங்கிகளின் நிர்வாகங்கள் ஏற்கவில்லை. 11 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற வங்கி நிர்வாகங்களின் முடிவை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு ஏற்கவில்லை. இதையடுத்து புதன்கிழமை நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி டிச. 2 ஆம் தேதி முதல் மண்டலம் வாரியாக 4 தினங்கள் வேலைநிறுத்தம் நடைபெறும். ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் புதன்கிழமை பிற்பகலில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. 5,000 கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடக்கம் ஏற்பட்டதாக வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பின் திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலச் செயலர் எட்வின் தெரிவித்தார்.