முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பிற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல் திருமாவளவன்
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பிற்கு மத்திய, மாநில
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு செவ்வாய்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள மாநிலம், பீர்மேடு சட்டப் பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பீஜூமோள், அத்துமீறி முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று தமிழக பொதுப்பணித் துறை அலுவலர்களைத் தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் அவருடன் வந்தவர்கள் அணையை சேதப்படுத்தியுள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் இப் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறை பிரசவம், மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளது தமிழக அரசின் செயல்படாத தன்மையைக் காட்டுகிறது.
இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை ரத்து என்பது ஊர்ஜிதம் செய்யப்படாத செய்தி. மோடி அரசு, இலங்கையுடன் ராஜாங்க அடிப்படையில் பேசி 5 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.