கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தரங்கம்பாடி, வேதாரண்யம் மீனவர்கள் 5 பேர் மாயம்
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் மு. தங்கராஜ், ப. ராமலிங்கம், செ. ஜெகன், செ. தர்மபாலன் மற்றும் வேதாரண்யம் அருகே உள்ள வானவன்மாதேவியைச் சேர்ந்த மா. விஷ்ணு
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று மாயமானது புதன்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் மு. தங்கராஜ், ப. ராமலிங்கம், செ. ஜெகன், செ. தர்மபாலன் மற்றும் வேதாரண்யம் அருகே உள்ள வானவன்மாதேவியைச் சேர்ந்த மா. விஷ்ணு ஆகியோர், மீனவர் தங்கராஜூக்குச் சொந்தமான பைபர் படகில், கடந்த 3-ம் தேதி காரைக்காலிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் அக். 6-ம் தேதி கரை திரும்ப வேண்டிய நிலையில், அக். 8-ம் தேதியான புதன்கிழமை வரை கரை திரும்பவில்லை. இதையடுத்து, மீனவர்கள் 5 பேரையும் காணவில்லை என மீனவப் பஞ்சாயத்தார் வருவாய்த் துறை மற்றும் மீன்வளத் துறைக்கு புதன்கிழமை தகவல் அளித்தனர்.
இது குறித்துத் தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் கீழ், தமிழக அரசு உத்தரவின் பேரில், காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 2 ரோந்து கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.