பழனி-பொள்ளாச்சி அகல ரயில்பாதை டிசம்பர் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளர் ரஸ்தோகி
பழனி ரயில் நிலையத்துக்கு மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2009ம் ஆண்டிற்கு முன்னதாக மதுரை, பாலக்காடு, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீட்டர்கேஜ் பாதையி்ல ரயில்கள்
பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதையில் வரும் டிசம்பர் மாத இறுதியில் பயணிகள் பயன்பாட்டுக்கு ரயில் இயக்கப்படும் என மதுரை மண்டல ரயில்வே மேலாளர் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.
பழனி ரயில் நிலையத்துக்கு மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2009ம் ஆண்டிற்கு முன்னதாக மதுரை, பாலக்காடு, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீட்டர்கேஜ் பாதையி்ல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீட்டர்கேஜ் பாதைகளை அகலரயில் பாதைகளாக மாற்றும் பொருட்டு 2009ம் ஆண்டு மே மாதம் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொள்ளாச்சி-திண்டுக்கல் இருப்புப் பாதையை அகலரயில் பாதையாக மாற்றும் பொருட்டு சுமார் ரூ.224 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் மிக தாமதமாக நடைபெற்ற நிலையில் மத்திய அரசை எம்.பி.,க்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திண்டுக்கல் முதல் பழனி வரையிலான அகலரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது பழனியில் இருந்து திண்டுக்கல், சென்னை, திருச்செந்தூர் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான 64 கி.மீ ரயில்பாதையில் சிறியதும், பெரியதுமான 25க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இருப்புப்பாதை வழியில் உள்ள கிராம மக்களுக்கு இருப்புப்பாதை பகுதியில் கடக்கும் முயற்சியில் ஈடுபடும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. வியாழக்கிழமை பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான சோதனை ஓட்டத்தில் தென்னக ரயில்வே மதுரை மண்டல மேலாளர் ரஸ்தோகி, தலைமைப்பொறியாளர்(கட்டுமானம்) வர்மா உள்ளிட்டோர் பங்கேற்று தண்டவாளத்தின் தன்மை, ரயிலின் இயக்குதல் தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
முன்னதாக பழனி ரயில் நிலையத்தில் சுகாதாரம், ரயில் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மேலாளர் ரஸ்தோகி தெரிவித்ததாவது, பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்று மேற்படி தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. விரைவில் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் வந்து இறுதி ஆய்வு செய்தவுடன் வரும் டிசம்பர் மாத இறுதியில் பணிகள் நிறைவு பெற்று பயணிகள் பயன்பாட்டுக்கு ரயில்கள் இயக்கப்படும். மேலும், புதிய ரயில்களுக்கு போதிய பைலட்கள், உதவி பைலட்கள் போதிய அளவில் உள்ளனர் என தெரிவித்தார்.
பழனி-பொள்ளாச்சி வரையிலான பாதை மதுரை மண்டலத்துக்கு உட்பட்டது என்ற நிலையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரையிலானது பாலக்காடு கோட்டத்துக்கும், பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரையிலான பாதை சேலம் கோட்டத்துக்கும் உட்பட்டது என்பதால் பணிகள் மந்தமாக உள்ளது. திண்டுக்கல் முதல் போத்தனூர், பாலக்காடு வரையிலான பணிகள் நிறைவுபெற்றால் மட்டுமே வெளிமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். அதுவே, பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.