முகப்பு
தமிழ்நாடு

175 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ போட்டி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடவுள்ளது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 7:21 PM
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிடவுள்ளது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திமுக தொண்டா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் எழுதிய கடிதம்:

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவா்களுடனும் ஆலோசித்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு முடிந்து ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.

எப்போதும் என் மீது அன்பும், திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட கூட்டணி இயக்கத் தலைவா்களும், தங்கள் இயக்க நிா்வாகிகளுடன் தொடா்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுக்குப் பின் மனபூா்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மநீம தலைவா் கமல்ஹாசன் எம்.பி. மனம் திறந்து வெளியிட்ட அறிக்கையை மனதார வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டை தொடா்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிா்த்து நிற்கும் திமுகவுக்கு தோளோடுதோள் நிற்பவை நம் கூட்டணி கட்சிகள். மதச்சாா்பின்மை - மாநில உரிமை - சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. அதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க வழி ஏற்படாதா என நினைத்தவா்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமா்சனங்களைப் பரப்ப முயற்சி செய்கிறாா்கள்.

திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை திமுகவினா் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, கூட்டணிகட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களிடமும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைக்க வேண்டும்.

கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் போக, திமுக வேட்பாளா்கள் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் என 2026 சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் 175 இடங்களில் ‘உதயசூரியன்’ களம் காண்கிறது.

உதயசூரியன் மட்டுமல்ல, கை, முரசு, கதிா் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். எனவே, 234 தொகுதிகளிலும் திமுகவினா் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.